மனித உயிருக்கு ஆபத்தான யுரேனியம் பறிமுதல் குறித்து போலீசாரிடம் அறிக்கை கேட்ட என்.ஐ.ஏ.
மும்பையில் யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் என்.ஐ.ஏ. அறிக்கை கேட்டு உள்ளது.
யுரேனியம் பறிமுதல்
மும்பை நாக்பாடா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் ரூ.21.30 கோடி மதிப்பிலான 7 கிலோ 100 கிராம் யுரேனியத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். அதிக கதிரியக்க தன்மை மற்றும் மனித உயிருக்கு பெரிய அச்சுறுத்தல் மிகுந்த இயற்கை யுரேனியம் எப்படி கைது செய்யப்பட்டவர்களுக்கு கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ. அறிக்கைஇந்தநிலையில் யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம், தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அறிக்கை கிடைத்து உள்ளது.
இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘‘விசாரணையின் போது, யுரேனியத்தின் கதிரியக்க தன்மை 90 சதவீதத்திற்கு மேல் இருப்பது தெரியவந்தது. எனவே யுரேனியம் எப்படி வந்தது என கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்து வருகிறோம். இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால், சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. எங்களிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளனர்’’ என்றார்.
இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழக்கு தொடர்பான ஆவணங்கள், தேவையான தகவல்களை என்.ஐ.ஏ.விடம் கொடுத்து உள்ளனர்.