கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை: பிரதமர் மோடி புகழாரம்


கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை:  பிரதமர் மோடி புகழாரம்
x
தினத்தந்தி 30 May 2021 8:55 AM GMT (Updated: 30 May 2021 8:55 AM GMT)

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் வேளாண் உற்பத்தியில் விவசாயிகள் சாதனை படைத்து உள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

புதுடெல்லி,

கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.  2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி, இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.  இதில், 77வது முறையாக மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 நாட்களில் டவ்-தே, யாஸ் ஆகிய இரு புயல்களை தைரியமுடன் எதிர்கொண்ட மக்களுக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

அவர் தொடர்ந்து பேசும்பொழுது, கொரோனா பாதிப்புக்கு எதிரான போரில் நம்முடைய நாடு எப்படி முழு பலத்துடன் போராடி வருகிறது என நாம் காண்கிறோம்.  அதேவேளையில், ஒரு சில பேரிடர்களும் சூழ்ந்த நிலையை நாடு எதிர்கொண்டது.  கடந்த 10 நாட்களில் இரு மிக பெரிய சூறாவளி புயல்களை நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு கடலோர பகுதிகள் எதிர்கொண்டன.

மேற்கு கடலோரத்தில் டவ்-தே புயலும், கிழக்கு கடலோரத்தில் யாஸ் புயலும் தாக்கின.  நாட்டு மக்களும், நாடும் இந்த சூறாவளி புயலை தைரியமுடன் எதிர்கொண்டனர்.

இந்த பேரிடரின்போது, புயல் பாதித்த மாநில மக்கள் தைரியமுடன் போராடி, பொறுமையும், கண்ணியமும் காத்தனர்.  அவர்களுடைய முயற்சிகளை நான் பணிவுடன் ஏற்று கொள்கிறேன்.  புயல் காலங்களில் நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மக்களை நான் வணங்குகிறேன்.

புயலால் அன்பிற்குரியவர்களை இழந்த மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  நாம் அனைவரும் இழப்புகளை சந்தித்தவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் என பேசியுள்ளார்.

இதன்பின்னர், நமது நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.  அது நாட்டின் ஒவ்வொரு அமைப்பின் மீதும் தாக்கம் ஏற்படுத்தியது.  இந்த தாக்கத்தில் இருந்து வேளாண் துறை பெரிய அளவில் தன்னை தற்காத்து கொண்டது.

அது, தன்னை பாதுகாத்து கொண்டதுடன் நில்லாமல், அந்த துறை வளர்ச்சி கண்டு, முன்னோக்கி நகர்ந்தது.  அதிக விளைச்சலை விவசாயிகள் உண்டு பண்ணி சாதனை படைத்துள்ளனர்.

இந்த முறை அதிக அளவில் வேளாண் பயிர்களை நாடு கொள்முதல் செய்யவுள்ளது.  பல இடங்களில் விவசாயிகள் இந்த முறை கடுகுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை விட கூடுதலாக பெற்று பலனடைந்தனர்.  இதனால், நெருக்கடியான சூழலில் நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருட்களை வழங்க முடிகிறது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.


Next Story