பீகார்: ‘சைக்கிள் சிறுமி’ ஜோதியின் தந்தை மாரடைப்பால் காலமானார்

ஊரடங்கில் காயமடைந்த தந்தையை பீகாருக்கு 1,200 கி.மீ. சைக்கிளிலேயே அழைத்து சென்று பாராட்டுகளை பெற்ற ஜோதியின் தந்தை மாரடைப்பால் காலமானார்.
தர்பங்கா,
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த ஆண்டு ஊரடங்கு அமலானது. இதனால், ரெயில், பேருந்து உள்ளிட்ட வாகன போக்குவரத்து முடங்கியது. இந்த நிலையில், கடந்த மே மாதம் பீகாரை சேர்ந்த ஜோதி குமாரி என்ற 15 வயது சிறுமியின் தந்தை அரியானாவின் குர்காவன் நகரில் சிக்கி கொண்டார்.
இதனால் சொந்த மாநிலம் திரும்புவதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஜோதி காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 கி.மீ. தொலைவுக்கு 10 நாட்களாக பயணித்து சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து சென்றார். இது சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங் ஆனது.
ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்கு வரும்படி அழைப்பும் விடுத்தார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஜோதி குமாரியின் செயலை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டார். இந்நிலையில் ஊரடங்கில், காயமடைந்த தந்தையை பீகாருக்கு 1,200 கி.மீ. சைக்கிளிலேயே அழைத்து சென்று பாராட்டுகளை பெற்ற ஜோதியின் தந்தை மோகன் பஸ்வான் தர்பங்கா நகரில் நேற்று மாரடைப்பால் காலமானார்.
ரிக்ஷா ஓட்டுனரான மோகன் கடந்த ஆண்டு நடந்த விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்து உள்ளார். அதன்பின்னர் அவரால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
Related Tags :
Next Story