அலோபதி, ஆயுர்வேதம் இரண்டுமே பயனுள்ளவைதான் - நிதி ஆயோக் உறுப்பினர் கருத்து

அலோபதி, ஆயுர்வேதம் இரண்டுமே பயனுள்ளவைதான். எது சிறந்தது என்ற விவாதத்தால் எந்த பயனும் இல்லை என்று கொரோனா மருந்தை உருவாக்கிய ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
ஆயுர்வேத மருத்துவத்தை முன்னிறுத்தும் யோகா குரு பாபா ராம்தேவ், ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவத்துக்கு எதிராக சமீபத்தில் கருத்து தெரிவித்தார். அதற்கு டாக்டர்களின் அமைப்பான இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.
இந்தநிலையில், அலோபதி, ஆயுர்வேதம் இடையிலான விவாதம் குறித்து ‘நிதி ஆயோக்’ உறுப்பினரும், பிரபல விஞ்ஞானியுமான வி.கே.சரஸ்வத் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.
இவர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய 2-டி.ஜி. என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதில் சம்பந்தப்பட்டவர் ஆவார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகள் இருக்கின்றன. அவற்றில், ஆயுர்வேத முறை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காரணமாக உள்ளது.
அலோபதி, ஆயுர்வேதம் இரண்டுமே வெவ்வேறான மருத்துவ முறைகள். இரண்டுமே பயனுள்ளவைதான். நாட்டில் இரண்டுமே பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவகையில் முக்கிய பங்காற்றுகின்றன. அதனால், எது சிறந்தது என்று விவாதிப்பதால் எந்த பயனும் இல்லை.
என்னை பொறுத்தவரை, ஆயுர்வேத மருத்துவ முறையை சமூகம் நன்றாக ஏற்றுக்கொள்ளும்வகையில், அதில் விஞ்ஞானரீதியாக நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய 2-டி.ஜி. கொரோனா தடுப்பு மருந்து, பதஞ்சலி நிறுவனத்தின் ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்டது அல்ல. அது, பதஞ்சலி உருவாக்கியது அல்ல. அந்த மருந்தை உருவாக்கியபோது நான் அறிவியல் ஆலோசகராக இருந்தேன்” என்று வி.கே.சரஸ்வத் கூறினார்.
Related Tags :
Next Story