மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து- முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
போபால்,
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி, நாடெங்கும் எதிரொலித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மே மாதம் 4-ந் தேதி நடைபெற இருந்த 12-ம் வகுப்பு தேர்வுகளை சி.பி.எஸ்.இ. ஒத்திவைத்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று உயர் மட்ட அளவிலான ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் நலன் கருதி இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து, மாநில அரசுகளும் பிளஸ் 2 தேர்வுகள் தொடர்பாக முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளன. குஜராத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு இன்று அறிவித்தது . இந்த நிலையில், மத்திய பிரதேசத்திலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story