குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்த போதிலும் தடுப்பூசி இல்லை - சிக்கிம் அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்


குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்த போதிலும் தடுப்பூசி இல்லை -  சிக்கிம் அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
x
தினத்தந்தி 5 Jun 2021 9:16 PM GMT (Updated: 5 Jun 2021 9:16 PM GMT)

குறைவான மக்கள் தொகையை கொண்ட மாநிலமாக இருந்த போதிலும் சிக்கிமில் 18 வயது முதல் 44 வயதினருக்கு குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கங்டுக்,

வடகிழக்கு மாநிலமான சிக்கிம் நாட்டின் பல மாநிலங்களை ஒப்பிடும் போது மிகச்சிறியதாகும். சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 7 லட்சம் ஆகும். 

இதற்கிடையில், அம்மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், 18 முதல் 44 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தடைபட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பணிகள் தொடர்பாக சிக்கிம் ஐகோட்டில் நேற்று வழக்கு ஒன்று நடைபெற்றது. நீதிபதிகள் மீனாட்சி மதன் ராய் மற்றும் பாஸ்கர் ராஜ் பிரதான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது 18 முதல் 44 வயதினருக்கு செலுத்த போதிய தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மாநிலத்தில் 18 முதல் 44 வயதிற்கு உள்பட்டோர் 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு செலுத்த 5 லட்சத்து 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தேவை. மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது மாநிலம் முழுவதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மொத்தமாக 14 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை. 

குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்த போதிலும் சிக்கிமில் மக்களுக்கு செலுத்த கொரோனா தடுப்பூசி இல்லை. மாநில மக்களுக்கு வேகமாக கொரோனா தடுப்பூசி செலுத்த மாநில அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story