திரிணாமுல் காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்: மம்தா கட்சியில் மருமகனுக்கு முக்கிய பதவி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். மருமகனுக்கு கட்சியில் முக்கிய பதவியை அளித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது.
அங்கு ஆட்சியை கைப்பற்ற தீவிர முயற்சி செய்தும், பா.ஜ,க. படுதோல்வியைத்தழுவியது.
3-வது முறை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள மம்தாவுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல்போக்கு தொடர்கதையாய் நீளுகிறது.
இந்த தருணத்தில் மம்தா பானர்ஜி கட்சியின் காரியக்கமிட்டி கூட்டம் உள்ளிட்ட 2 முக்கிய கூட்டங்கள் நேற்று நடைபெற்றன.
இதில் மம்தா, கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்தார். மிக முக்கிய மாற்றம், 33 வயதே ஆன தனது மருமகன் (சகோதரர் அமித் பானர்ஜியின் மகன்) அபிஷேக் பானர்ஜி எம்.பி.யை கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கினார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா கட்சியை வெற்றி பெறச்செய்ததிலும், தேர்தல் உத்திகளை வகுத்து தர பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை அமர்த்தியதிலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
அவரை கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்கி மம்தா பானர்ஜி அழகு பார்ப்பது, அபிஷேக் பானர்ஜியின் செல்வாக்கு கொடி கட்டிப்பறப்பதையே காட்டுகிறது. கட்சியில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தை கண்டுபிடிக்காமல்தான் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பலரும் பா.ஜ.க.வுக்கு தாவினர். மம்தாவுக்கு அடுத்த இடத்தை கட்சியில் அவர் இப்போது பிடித்துள்ளார்.
இப்போது கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு அபிஷேக் பானர்ஜி வந்து விட்டதால், அவர் கட்சியின் இளைஞர் அணி தலைவர் பதவியைத் துறந்தார். அந்தக் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் கட்சியில் இளைஞர் அணி தலைவராக நடிகர் சயோனி கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுதீப் பந்தோபாத்யாய், டெரக் ஓ பிரையன் ஆகிய இருவரும் நாடாளுமன்றகட்சி தலைவர் பதவிகளில் தொடர்கின்றனர்.
கட்சியின் மகளிர் அணித்தலைவராக ககோலி கோஷ் தஸ்திதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் மந்திரிகளின் கார்களில் சுழலும் சிவப்பு விளக்குக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிற பவானிப்பூர் உள்ளிட்ட தொகுதி இடைத்தேர்தல்களில் கட்சியின் உத்தி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலை சந்திப்பதற்கு ஏற்ற உத்திகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story