2 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு 1.14 லட்சமாக சரிவு - பலி எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கு கீழே வந்தது


2 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா ஒரு நாள் பாதிப்பு 1.14 லட்சமாக சரிவு - பலி எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கு கீழே வந்தது
x
தினத்தந்தி 6 Jun 2021 11:34 PM IST (Updated: 6 Jun 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 2 மாதங்களில் இல்லாத அளவில், கொரோனா ஒரு நாள் பாதிப்பு 1.14 லட்சமாக சரிவைச் சந்தித்து உள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலி நேற்று மீண்டும் 3 ஆயிரத்துக்கு கீழே வந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை எந்த வேகத்தில் உச்சம் தொட்டதோ, அதே வேகத்தில் சரிந்தும் வருகிறது. தொடர்ந்து தினசரி பரவல் குறைகிறது. பரவல் சங்கிலி உடைத்தெறியப்படுகிறது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 1 லட்சத்து 14 ஆயிரத்து 460 ஆக பதிவாகி உள்ளது.

இது கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவில் மிகக்குறைந்த பதிவு ஆகும். கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி 96 ஆயிரத்து 982 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த அளவு 2 கோடியே 88 லட்சத்து 9 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக அமைகிறது. நேற்றுமுன்தினம் ஒரு நாளில் 20 லட்சத்து 36 ஆயிரத்து 311 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

ஆனால் பாதிப்பு விகிதம் 5.62 சதவீதம்தான். தொடர்ந்து 13-வது நாளாக பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்குள் இருக்கிறது.

வாராந்திர பாதிப்பு விகிதமும் 6.54 சதவீதமாக சரிந்தது.

சில தினங்களாக கொரோனாவால் ஏற்படுகிற உயிர்ப்பலி அளவு 3 ஆயிரத்துக்கு கீழே சென்றது. ஆனால் நேற்று முன்தினம் திடீரென கொரோனாவால் ஏற்படும் பலி 3,380 ஆக அதிகரித்தது.

ஆனால் நேற்று உயிர்ப்பலி மீண்டும் 3 ஆயிரத்துக்கு கீழே வந்து விட்டது. காலை 8 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் 2,677 பேர் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாமல் மரணம் அடைந்துள்ளனர். இது கடந்த 42 நாட்களில் மிகக் குறைந்த இறப்பு ஆகும்.

இதுவரை நாட்டில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

கொரோனா இறப்பு விகிதம் தொடர்ந்து 1.20 சதவீதமாக நீடிக்கிறது.

நேற்று அதிக எண்ணிக்கையிலானவர்கள் வழக்கம்போல மராட்டியத்தில்தான் (741) இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 443. கர்நாடகத்தில் 365. கேரளாவில் 209.

நாட்டில் மராட்டிய மாநிலத்தில்தான் இதுவரையில் அதிகபட்சமாக 99 ஆயிரத்து 512 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று தொடர்ந்து 24-வது நாளாக தினசரி பாதிப்பின் அளவை விட மீட்பின் அளவு அதிகமாக இருந்தது.

1 லட்சத்து 14 ஆயிரத்து 460 பேர் பாதிப்புக்குள்ளாகிய நிலையில், 1 லட்சத்து 89 ஆயிரத்து 232 பேர் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீட்கப்பட்டனர்.

இதுவரை நாட்டில் 2 கோடியே 69 லட்சத்து 84 ஆயிரத்து 781 பேர் கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்டிருக்கிறார்கள்.

கொரோனா மீட்பு விகிதம் 93.67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நேற்று நாட்டிலேயே அதிக எண்ணிக்கையாக தமிழ்நாட்டில் 32 ஆயிரத்து 472 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுவோர் விகிதம் தொடர்ந்து சரிகிறது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் 77 ஆயிரத்து 449 குறைந்தது. காலை 8 மணி நிலவரப்படி நாடெங்கும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 14 லட்சத்து 77 ஆயிரத்து 799 பேர் சிகிச்சையில் இருந்தனர். இது மொத்த பாதிப்பில் வெறும் 5.13 சதவீதம்தான்.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Next Story