உலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு - அறிக்கையில் தகவல்


உலக அளவில் நிலையான வளர்ச்சி பட்டியலில் இந்தியாவுக்கு சரிவு - அறிக்கையில் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2021 6:42 AM IST (Updated: 7 Jun 2021 6:42 AM IST)
t-max-icont-min-icon

உலக அளவில் நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் இந்தியா 2 இடம் சரிந்து 117-வது இடத்தில் உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நிலையான வளர்ச்சி-2030 செயல்திட்டமானது, ஐ.நா. உறுப்பு நாடுகளால் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் அவசர நடவடிக்கைகளுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளாக 17 இலக்குகளை ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டு இருந்தன.

குறிப்பாக பசி-வறுமை ஒழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், மலிவான மற்றும் தூய எரிசக்தி, ஒழுக்கமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி, தொழில், புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு உள்பட 17 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

இந்த இலக்குகளின் அடிப்படையிலான கடந்த ஆண்டு அறிக்கையில் ஐ.நா.வின் மொத்தமுள்ள 193 உறுப்பு நாடுகளில் இந்தியா 115-வது இடத்தில் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியா அடிப்படையில் 2 இடம் சரிந்து 117-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி இலக்கு மதிப்பீடு 100-க்கு 61.9 ஆகும்.

பசி ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம், நெகிழ்திறன் மிக்க உள்கட்டமைப்பு உள்ளடக்கிய மற்றும் நிலையான தொழில்மயமாக்கலை ஊக்குவித்தல் மற்றும் புத்தாக்கத்தை வளர்ப்பது போன்ற இலக்குகள் இந்தியாவுக்கு மிகுந்த சவாலாக மாறியிருப்பதே இந்த சரிவுக்கு காரணம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

இதைப்போல சுற்றுச்சூழல் ஆரோக்கியம், காலநிலை, காற்று மாசுபாடு, சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் சுற்றுச்சூழல் செயல்திறன் பட்டியலில் இந்தியா 168-வது இடத்தில் உள்ளது.

அதேநேரம் சுற்றுச்சூழல் சுகாதாரம் பிரிவில் இந்தியா 172-வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலில் பூடான், நேபாளம், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய தெற்கு ஆசிய நாடுகளை விட இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநில வாரியாக ஒட்டுமொத்த அளவில் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டியதில் கேரளா, இமாசல பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் முன்னணியில் இருக்கின்றன.

அதேநேரம் ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

Next Story