கடந்த நிதியாண்டில் ரெயில்களில் 27½ லட்சம் பேர் ஓசி பயணம்; ரூ.144 கோடி அபராதம் வசூல்


கடந்த நிதியாண்டில் ரெயில்களில் 27½ லட்சம் பேர் ஓசி பயணம்; ரூ.144 கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 7 Jun 2021 6:52 AM IST (Updated: 7 Jun 2021 6:52 AM IST)
t-max-icont-min-icon

கடந்த நிதியாண்டில் ரெயில்களில் 27½ லட்சம் பேர் ஓசி பயணம் மேற்கொண்டனர். இதன்மூலம் ரூ.144 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது.

புதுடெல்லி,

மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், கடந்த நிதியாண்டில் (2020-2021) ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு ரெயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது. ரெயில்வே வாரியம் கூறியிருப்பதாவது:-

கடந்த நிதியாண்டில் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் சிறப்பு டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், டிக்கெட் எடுக்காமலும், அதிகாரபூர்வமற்ற டிக்கெட் வைத்திருந்ததாலும் 27 லட்சத்து 57 ஆயிரம்பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.143 கோடியே 82 லட்சம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், முந்தைய நிதியாண்டில் (2019-2020) பிடிபட்டவர்களில் இது 25 சதவீதத்தை விட குறைவுதான். அப்போது, 1 கோடியே 10 லட்சம்பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.561 கோடியே 73 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் தொடக்கத்தில் (ஏப்ரல் மாதம்) இருந்தே ரெயில்கள் ஓடவில்லை. கடந்த ஆண்டு மே 1-ந் தேதியில் இருந்துதான், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்கள் ஓடத்தொடங்கின. முன்பதிவில்லா பெட்டிகள், முன்பதிவு இருக்கை பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டன.

நடைமேடை சீட்டுகள் வழங்கப்படவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வளவு கெடுபிடிகளையும் மீறி, 27 லட்சத்து 57 ஆயிரம்பேர் டிக்கெட் இல்லாமல் பிடிபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story