உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 3 ஹெலிகாப்டர்கள் கடற்படையில் சேர்ப்பு

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 3 ஹெலிகாப்டர்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம்,
இந்திய கடற்படைக்காக மத்திய அரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால் 3 இலகு ரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் நேற்று கடற்படையின் கிழக்கு பிராந்திய கமாண்டில் சேர்க்கப்பட்டன.
விசாகப்பட்டினத்தில் கிழக்கு பிராந்திய கடற்படையின் கமாண்டிங் அதிகாரி அஜேந்திரா பகதூர் சிங் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 3 ஹெலிகாப்டர்களும் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டன.
கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியில் அமர்த்தப்பட உள்ள இந்த ஹெலிகாப்டர்களில் கடல் பிராந்திய உளவுப்பணிக்காக சிறப்பு வாய்ந்த நவீன ரேடார் கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. மேலும் இரவு மற்றும் பகலில் கடலில் தேடும் பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்புகளுடன் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
மேலும் கனரக ஹெலிகாப்டர்கள் மற்றும் பன்னோக்கு ஹெலிகாப்டர்களில் காணப்படும் ஏ.எல்.எச். அமைப்புகள் இந்த ஹெலிகாப்டர்களும் இணைத்திருப்பது கூடுதல் அம்சமாகும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டர்கள் மத்திய அரசின் ஆத்மநிர்பார் திட்டத்துக்கு உந்துசக்தியாக விளங்குவதாக பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story