அச்சமின்றி பணியாற்ற உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் - மோடிக்கு, இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தண்டிக்க கடுமையான சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம் எழுதி உள்ளது. டாக்டர்கள் அமைப்பான இந்திய மருத்துவ சங்கம், பிரதமர் மோடிக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புதுடெல்லி,
சிலர் நவீன மருத்துவம் குறித்தும், கொரோனா தடுப்பூசி குறித்தும் பொதுமக்களிடையே சந்தேகத்தை எழுப்பி தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும், மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலை பெறாத தங்களது மருந்துகளை மந்திரசக்தி படைத்தவை என்றும், அற்புத மருந்துகள் என்றும் கூறி, மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள்.
இத்தகைய நபர்களை இந்திய தண்டனை சட்டம், தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின்கீழ் தண்டிக்க வேண்டும்.
18 வயதை தாண்டிய அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும்.
நாட்டின் பல பகுதிகளில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் மீது நடந்து வரும் தாக்குதல்கள் எங்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளன. அசாமில் ஒரு இளம் டாக்டரும், மற்றொரு மாநிலத்தில் பெண் டாக்டர்களும், மூத்த டாக்டர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
பணியில் உள்ள டாக்டர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்குபவர்கள் மீது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் ஒரு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. அந்த மசோதாவை உடனடியாக அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், இத்தகையவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்கும்வகையில் காலவரையறை நிர்ணயிக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 18-ந்தேதியை தேசிய எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம்.
ஆகவே, தாங்கள் (மோடி) இதில் தலையிட்டு, டாக்டர்களும், சுகாதார பணியாளர்களும் அச்சமின்றி பணியாற்ற உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story