இலவச தடுப்பூசி பற்றிய மோடி அறிவிப்புக்கு முதல்-மந்திரிகள் வரவேற்பு

அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்ற மோடியின் அறிவிப்புக்கு முதல்-மந்திரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது:-
புதுடெல்லி,
18 முதல் 44 வயதுவரை உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பிரதமரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல், தீபாவளிவரை ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் அறிவிப்பும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நடவடிக்கைகள், கொரோனாவை வலிமையாக எதிர்த்து போராட உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரீந்தர் சிங் (காங்கிரஸ்):- நாடு முழுவதற்கும் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசியை கொள்முதல் செய்து வினியோகிக்கும் பொறுப்பை மத்திய அரசே ஏற்க இருப்பது நல்ல முடிவு. இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே தீர்வு என்று நான் மோடிக்கு 2 தடவை கடிதம் எழுதி இருந்தேன்.
எங்கள் கோரிக்கையை பிரதமர் ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், தடுப்பூசி பெறுவதில் பிரச்சினையை சந்திக்கும் பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு விரைவில் தடுப்பூசி கிடைக்கும். சமமான விலையையும் உருவாக்கும்.
கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சவந்த் (பா.ஜனதா):- 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கும் பிரதமரின் முடிவை வரவேற்கிறேன். இதனால், கோவாவில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த முடியும்.
பிரதமரின் அறிவிப்பு குறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் தளத்தில், ‘நமது நீண்ட கால கோரிக்கையான அனைவருக்கும் இலவச தடுப்பூசி குறித்து கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்பும், அதன் பிறகும் பலமுறை பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன். கடும் அழுத்தத்தால் 4 மாதங்களுக்குப்பிறகு இறுதியாக நமது கோரிக்கைக்கு அவர் செவிசாய்த்துள்ளார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆனாலும் பிரதமரின் இந்த தாமதமான முடிவு அதற்குள் ஏராளமான உயிர்களை பலி வாங்கி விட்டதாக கூறியுள்ள மம்தா பானர்ஜி, தற்போதாவது சிறப்பாக இந்த திட்டத்தை நிர்வகிக்க வேண்டும் எனவும், வெறும் பிரசாரமாக இருக்கக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே பிரதமரின் அறிவிப்பை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘மாநிலங்களுக்கு 21-ந்தேதி முதல் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் அறிவித்திருப்பது, இந்த நேரத்துக்கு மிகவும் பொருத்தமான அறிவிப்பாகும். எங்கள் கோரிக்கைக்கு நேர்மறையான பதிலை பிரதமர் அளித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்போல ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் உள்பட பல்வேறு முதல்-மந்திரிகளும், மத்திய மந்திரிகள் மற்றும் பா.ஜனதா தலைவர்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா:-
நாட்டில் எந்த பிரச்சினை எழுந்தாலும், பிரதமர் மோடி நாட்டை முன்வரிசையில் நின்று வழிநடத்திச் செல்கிறார். கொரோனாவுக்கு எதிரான போரில், ஒவ்வொரு இந்தியனுடன் கைகோர்த்து நிற்கிறார்.
எதிர்க்கட்சிகளும் குழப்பம் ஏற்படுத்துவதை தவிா்த்து, இந்த போரில் தங்கள் பங்களிப்பை ஆற்ற வேண்டும்.
ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்:- கொரோனாவுக்கு எதிரான போருக்கு மோடி புதிய வலிமையை அளித்துள்ளார். தடுப்பூசி குறித்த வதந்திகளை முறியடித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story