பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன்? - சிவசேனா விளக்கம்


பிரதமர் மோடி- உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன்? - சிவசேனா விளக்கம்
x
தினத்தந்தி 10 Jun 2021 12:28 AM GMT (Updated: 10 Jun 2021 12:28 AM GMT)

பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனிப்பட்ட சந்திப்பு ஏன் என்பதற்கு சிவசேனா விளக்கம் அளித்துள்ளது.

மும்பை, 

நேற்று முன்தினம் டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது மந்திரி சபை சகாக்களான துணை முதல்-மந்திரி அஜித்பவார் (தேசியவாத காங்கிரஸ்), மந்திரி அசோக் சவான்(காங்கிரஸ்) ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

மேலும் மோடி, உத்தவ் தாக்கரே இருவரும் தனியாகவும் சந்தித்து பேசினர். இந்த தனிப்பட்ட சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் மராட்டிய கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றும் கூட்டணி தலைவர்கள் கூறினர்.

இதுகுறித்து பதில் அளித்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே இந்த சந்திப்பில் தவறு ஒன்றும் இல்லை. நான் ஒன்றும் பாகிஸ்தான் தலைவர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்கவில்லை என தெரிவித்தார்.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:-

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பயணம் தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக இல்லை. இதில் அரசியல் பார்ப்பவர்கள், அந்த சிந்தனையிலேயே மகிழ்ச்சியாக இருக்கட்டும். இந்த சந்திப்பு குறித்து நிறைய யூகங்கள் இருக்கும்.

ஆனால் மத்திய அரசுடன் சார்ந்த மராட்டிய பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்ற ஒற்றை நம்பிக்கை மட்டுமே எங்களிடம் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் உறவின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். மாநிலத்திற்கான மத்திய அரசின் பங்கை சிவசேனா நிச்சயம் கேட்டு பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story