மேற்குவங்காளம்: இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு


மேற்குவங்காளம்: இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு
x
தினத்தந்தி 10 Jun 2021 3:51 AM GMT (Updated: 10 Jun 2021 3:51 AM GMT)

மேற்குவங்காளத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் ஹூக்லி மாவட்டம் சந்தன்நகர் பகுதியில் லக்‌ஷ்மிகஞ்ச் பஜார் என்ற சந்தைப்பகுதி அமைந்துள்ளது. இந்த சந்தைபகுதியில் லிட்சுபதி மற்றும் உருதுபஜார் என்ற இரு பகுதிகளாக கடைகள் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

இதற்கிடையில், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே மோதல் நிலவி வந்துள்ளது. இந்நிலையில், இந்த வெறுப்புணர்வு மற்றும் மோதலை தவிர்க்க போலீசார் சார்பில் நேற்று மாலை சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போது, பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதல் மோதலில் முடிந்துள்ளது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 

மோதலை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் ஒரு போலீஸ் காயமடைந்தார். மோதல் முற்றிய நிலையில் இருதரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகள வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மொத்தம் 6 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் ஒருநபர் காயமடைந்தார்.

கடைகள், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இந்த மோதலால் சந்தன்நகர் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது. இதையடுத்து, மோதல் நடைபெற்ற பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது, மோதல் முடிவடைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. சந்தன்நகர் கடைப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

Next Story