பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து  நாடுமுழுவதும்  காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 8:30 AM GMT (Updated: 11 Jun 2021 8:34 AM GMT)

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சங்கம் தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ரஞ்சன்குமார் முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் கோபண்ணா, செல்வம், சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமைந்தகரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரங்க பாஷ்யம், ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சென்னை மேற்கு மாவட்டத்தில் மொத்தம் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை முழுவதும் மொத்தம் 142 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது

 
கரூரில் ஜோதிமணி எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய ஜோதிமணி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை 21 முறை உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

நெல்லை வண்ணாரப்பேட்டையில் பெட்ரோல் நிலையம் முன்பு, இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல் டீசல் விலை உயர்வை, திரும்பப் பெறாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்துபேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு மத்திய அரசே வழிவகை செயதுள்ளதாக குற்றம் சாட்டினார்.

கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு திரண்ட காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், பா.ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதேபோல் கர்நாடகாவின் கல்புர்கி உள்ளிட்ட பகுதிகளிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கார் ஒன்றை குதிரை வண்டியில் ஏற்றி காங்கிரஸ் கட்சியினர் தங்கலது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். காருக்கு மாலையிட்டு இறுதி மரியாதை செய்த அவர்கள், காரை குதிரை வண்டியில் ஊர்வலமாக எடுத்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இதேபோல் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர், மத்திய  அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். 

Next Story