பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளர் திரிணாமுல் காங்கிரசில் இணைகிறார்!

பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளர் முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா,
பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் முகுல் ராய். மேற்குவங்காளத்தை சேர்ந்த 67 வயதான முகுல் ராய் 1998 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
1998 முதல் திரிணாமுல் காங்கிரசில் இருந்துவந்த முகுல் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், இவர் சில பாஜக தலைவர்களையும் சந்தித்தார்.
இதனால், 2015 ஆம் ஆண்டு முகுல் ராயை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் மம்தா பானர்ஜி நீக்கினார். இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
மேலும், அவர் நடந்து முடிந்த மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் கிருஷ்ணாநகர் உத்தர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதற்கிடையில், முகுல் ராய் மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளர் முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் சென்றுள்ளார். அங்கு திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் முன்னிலையில் முகுல் ராய் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பாஜக மற்றும் மேற்குவங்காள அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story