லட்சத்தீவில் தங்கியுள்ள ஜெர்மனியரின் ரகசிய நடவடிக்கைகள் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. கோரிக்கை


லட்சத்தீவில் தங்கியுள்ள ஜெர்மனியரின் ரகசிய நடவடிக்கைகள் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2021 8:40 PM IST (Updated: 12 Jun 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

லட்சத்தீவில் தங்கியுள்ள ஜெர்மனி நாட்டின் சமூகசெயற்பாட்டாளர் மேற்கொண்டுவரும் ரகசிய நடவடிக்கைகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தவேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திற்கு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.

திருவனந்தபுரம்,

இந்திய யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் ஒன்று. மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை லட்சத்தீவுகள் உள்ளடக்கியுள்ளது. இதில் 10 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 11-வது தீவில் வணிக பயன்பாட்டிற்காக ஓட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக பிரபுல் ஹோடா படேல் செயல்பட்டுவருகிறார். பிரபுல் ஹோடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. 

இந்த நடவடிக்கைகள் லட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேற்படுத்த எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிர்புல் ஹோடா படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்த விவகாரம் லட்சத்தீவுகளுக்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தினமும் விவாதங்களும் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த சேர்ந்த பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா பங்கேற்றார்.

கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது.  பிரபுல் ஹோடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார். தொலைக்காட்சி விவாதத்தின் போது  ‘உயிரியல் ஆயுதம்’ என தெரிவித்த கருத்து தொடர்பாக  ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதற்கிடையில், லட்சத்தீவு விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. 

இந்நிலையில், லட்சத்தீவில் தங்கியுள்ள ஜெர்மனி நாட்டை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான ரோலன் மோஸ்லி என்பவரின் நடவடிக்கைகள் சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாவும், அவரின் ரகசிய நடவடிக்கைகள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. இளமாரம் கரீம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். 

மேலும், ஜெர்மனியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரோலனை பாதுகாக்கும் நபர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இளமாரம் கரீம் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

Next Story