பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? - மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி விளக்கம்


பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? - மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2021 4:07 PM IST (Updated: 13 Jun 2021 4:07 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஒரு வருடத்தில் ரூ.35,000 கோடிக்கு மேல் தடுப்பூசிகளுக்கு செலவிடப்படுகிறது என மத்திய பெட்ரோலியத்துறை தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்த தொடங்கின. எனினும் கடந்த ஏப்ரல் மாதம் தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றதையடுத்து, பெட்ரோல், டீசல் விலை உயராமல் ஒரே நிலையாக விற்பனை ஆகி வந்தது.

இந்நிலையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்ததையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. 

இந்தநிலையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தற்போதைய எரிபொருள் விலைகள் மக்களுக்கு சிக்கலானவை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அது மத்திய / மாநில அரசாக இருந்தாலும், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஒரு வருடத்தில் ரூ .35,000 கோடிக்கு மேல் தடுப்பூசிகளுக்கு செலவிடப்படுகிறது. நலத்திட்டங்களுக்கு செலவிட பணத்தை சேமிக்கிறோம்.

காங்கிரஸ் ஆளுகின்ற பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் எரிபொருள் விலை ஏன் அதிகமாக உள்ளது என்று ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும். ஏழைகள் குறித்து அவருக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், மும்பையில் எரிபொருள் விலை மிக அதிகமாக இருப்பதால் வரிகளைக் குறைக்க மராட்டிய முதல்-மந்திரிக்கு அவர் அறிவுறுத்த வேண்டும் என்றார்.

Next Story