பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்; ரெயில்வே துறைக்கு 94 சதவீதம் வருமானம் இழப்பு


பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை நிறுத்தம்; ரெயில்வே துறைக்கு 94 சதவீதம் வருமானம் இழப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 11:42 PM IST (Updated: 13 Jun 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காரணமாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அறிவித்தார். அதற்கு முன்பாகவே ரெயில் நிலையங்களில் பயணிகளை வழியனுப்பவும், வரவேற்கவும் கூடுகிற கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதத்தில் ரெயில்வே நடவடிக்கை எடுத்தது.

ரெயில் நிலைய பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை தீர்மானிக்கவும், மக்கள் நுழைவைக் கட்டுப்பத்தவும் மண்டல மேலாளர்களுக்கு ரெயில்வே துறை முதலில் அதிகாரம் வழங்கியது. அதைத் தொடர்ந்து பல ரெயில்வே மண்டலங்கள் மக்கள் கூட்டம் நுழைவை மறுத்தன. பிளாட்பார டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. செல்லுபடியாகும் பயண டிக்கெட் வைத்திருப்பவர் மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஓராண்டு காலம் இது அமலில் இருந்தது. பின்னர் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆகவும், பின்னர் சில மண்டலங்களில் ரூ.50 ஆகவும்கூட உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு தற்காலிகமானது, கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது என கூறப்பட்டது.

ஆனால் பிளாட்பார டிக்கெட் விற்பனையை நிறுத்தி, பயணிகளை அனுமதிக்க மறுத்ததால் அதன்மூலம் வரும் ரெயில்வேயின் வருமானம் 2020-21 நிதி ஆண்டில் 94 சதவீதம் சரிந்துள்ளது. இந்த தகவல், மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்படி எழுப்பிய கேள்விகளுக்கு ரெயில்வே அளித்த பதிலில் தெரிய வந்தது. இது குறித்த கூடுதல் தகவல்கள் வருமாறு:-

* 2020-21 நிதி ஆண்டில் 2021 பிப்ரவரி மாதம் வரையில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையால் கிடைத்த வருமானம் ரூ.10 கோடி மட்டுமே.

* 2019-20 நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையில் கிடைத்த வருவாய் 160.87 கோடி ஆகும். இது அதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் ரெயில்வே ஈட்டிய அதிகபட்ச வருமானம் ஆகும்.இதனுடன் ஒப்பிடுகையில் 2020-21 நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையில் 94 சதவீதம் ரெயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

* 2018-19 நிதி ஆண்டில் பிளாட்பார டிக்கெட் விற்பனை மூலம் ஈட்டிய வருமானம் ரூ.130.20 கோடி ஆக உயர்ந்தது.

* தற்போது நாட்டில் புதுடெல்லி, டெல்லி சந்திப்பு, ஹஸ்ரத் நிஜாமுதீன், ஆனந்த் விகார் முனையம், மீரட் நகரம், காசியாபாத், டெல்லி சாராய் ரோஹில்லா, டெல்லி கண்டோன்மென்ட் ஆகிய 8 ரெயில் நிலையங்களில் மட்டுமே பிளாட்பார டிக்கெட் வசதி உள்ளது.
1 More update

Next Story