பெங்களூரு மாநகராட்சி, சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்


பெங்களூரு மாநகராட்சி, சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 14 Jun 2021 1:47 AM IST (Updated: 14 Jun 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சி, சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உணவு தொகுப்புகள்
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை வரிசையில் நிற்க வைத்துவிட்டனர். பணமதிப்பிழப்பு திட்டத்தை கொண்டு வந்து வங்கி வாசலில் மக்களை வரிசையில் நிற்க வைத்தனர். அதன் பிறகு ஆதார் எண்ணை இணைக்க வரிசையில் நிற்க வைத்தனர். கொரோனாவை பரப்பி அதன் மூலம் மக்களை படுக்கைக்காக வரிசையில் நிற்க வைத்தனர். இறந்த பிறகு பிணங்களை தகனம் செய்யவும் வரிசையில் நிற்க வைத்துவிட்டனர்.இப்போது உணவு தானிய தொகுப்பு வழங்க நாங்கள் மக்களை நிற்க வைத்தோம். தேர்தலுக்காக நாங்கள் இங்கு மக்களுக்கு உணவு தொகுப்புகளை வழங்கவில்லை. மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் உணவு தானியங்களை வழங்கியுள்ளோம்.

பணத்தை பறிக்கின்றன
மக்களின் சுமையை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். ஏழை-நடுத்தர மக்கள் தங்களிடம் இருக்கும் சிறிதளவு தங்கத்தை அடகு வைத்துவிட்டு வாழ்க்கையை நடத்துகிறார்கள். ஏராளமானவர்கள் வேலை இழந்துவிட்டனர். படித்த இளைஞர்களை பக்கோடா விற்குமாறு பிரதமர் மோடி கூறினார். ஆனால் இப்போது பக்கோடா தயாரிக்கும் சமையல் எண்ணெய் விலையையும் லிட்டர் ரூ.200 ஆக உயர்த்தி விட்டனர்.நாட்டு மக்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ளனர். பெட்ரோல் விலை ரூ.100-க்கு வந்துவிட்டது. மத்திய-மாநில அரசுகள் மக்களின் பாக்கெட்டுகளில் உள்ள பணத்தை பறிக்கின்றன. வரும் நாட்களில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல், சட்டசபை தேர்தல் வரவுள்ளது. அப்போது பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story