புதுவையில் நாளை மறுநாள் பதவி ஏற்பு விழா; புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு


புதுவையில் நாளை மறுநாள் பதவி ஏற்பு விழா; புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 13 Jun 2021 9:39 PM GMT (Updated: 13 Jun 2021 9:39 PM GMT)

நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ள நிலையில் புதிய அமைச்சர்கள் யார், யார்? என்பது பற்றிய பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளது. சபாநாயகர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.

சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

அமைச்சரவை விரிவாக்கம்
தேர்தல் முடிவையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல்- அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மாதம் 7-ந்தேதி பதவியேற்று பணிகளை கவனித்து வருகிறார்.இதற்கிடையே அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பிரச்சினை உடன்பாடுக்கு வராமல் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க.. இடையே இழுபறியில் இருந்து வந்தது. இதையொட்டி பா.ஜ.க. மேலிட பார்வையாளர் ராஜீவ்சந்திரசேகர் எம்.பி. புதுவை வந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அமைச்சரவை இலாகா குறித்து ரங்கசாமியை 3 முறை சந்தித்து பேசினார்.

இன்று பட்டியல்?
அப்போது அவரிடம் எதுவாக இருந்தாலும் கட்சி தலைமையிடம் பேசிக் கொள்வதாக ரங்கசாமி கறாராக தெரிவித்து விட்டார். அதன்பிறகும் அமைச்சரவை விரிவாக்கம் இழுபறி நிலை நீடித்து வந்த நிலையில் ஒருவழியாக இருகட்சிகளும் சமரசம் செய்து கொண்டன.அதாவது சபாநாயகர், 2 அமைச்சர்கள் தர ரங்கசாமி ஒப்புக் கொண்டதையடுத்து சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வம், அமைச்சர் பதவிக்கு நமச்சிவாயம், ஜான் குமார் ஆகியோரது பெயர்களை பா.ஜ.க. மேலிடம் பரிந்துரைத்துள்ளது.என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக யார், யாரை நியமிப்பது என்பது தொடர்பாக முடிவு செய்து வைத்துள்ள ரங்கசாமி இன்று (திங்கட்கிழமை) கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

வேட்புமனு தாக்கல்
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அன்றைய தினம் பா.ஜ.க. சார்பில் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடும் ஏம்பலம் செல்வம் இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று தெரிகிறது. சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்பும் எம்.எல்.ஏ.க்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.சபாநாயகர் பதவிக்கு போட்டி இருந்தால் நாளை மறுநாள் தேர்வு நடத்தப்படும். போட்டியில்லாவிட்டால் ஏம்பலம் செல்வம் ஏகமனதாக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவார்.

துணை சபாநாயகர் தேர்தல்
முதல்-அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் சபாநாயகரின் ஆசனத்தில் அமர வைத்து வாழ்த்திப் பேசுவார்கள். அதன்பின் சபாநாயகர் ஏற்புரை நிகழ்த்துவார். அத்துடன் சட்டமன்ற கூட்டம் நிறைவு பெறும். அதன்பின் வேறொரு நாளில் துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும்.

Next Story