‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் இருந்து நாடு முழுவதும் 850 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன: டி.ஆர்.டி.ஓ. தலைவர்

‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் இருந்து நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 850 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகப்பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. தினந்தோறும் லட்சக்கணக்கான நோயாளிகள் உருவானதால் அத்தியாவசிய மருந்துகள், ஆக்சிஜன், தடுப்பூசி போன்றவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு மருத்துவ துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் உதவிக்கரம் நீட்டின. அந்தவகையில் நாட்டின் பாதுகாப்புத்துறையும் முழுவீச்சில் களத்தில் இறங்கியிருந்தது.இதில் முப்படைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (டி.ஆர்.டி.ஓ.) பல்வேறு பணிகளை மேற்கொண்டது. அந்த பணிகள் தற்போதும் தொடர்ந்து வருகிறது.இவ்வாறு கொரோனாவின் 2-வது அலையின்போது டி.ஆர்.டி.ஓ. மேற்கொண்ட பணிகளை அதன் தலைவர் சதீஷ் ரெட்டி நேற்று வெளியிட்டார். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (டி.எஸ்.டி.) நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பறக்கும் மருத்துவமனைகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவதற்காக டி.ஆர்.டி.ஓ. முன்னதாகவே தயாராக இருந்தது. பின்னர் தொற்று உச்சத்தில் இருந்தபோது அனைத்து உதவிகளையும் வழங்கினோம். குறிப்பாக 2-வது அலையின்போது நாட்டின் பல நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைத்தோம். அவற்றை நாங்கள் பறக்கும் மருத்துவமனை என அழைப்போம். இந்த ஆஸ்பத்திரிகளில் இருந்து வைரஸ் தொற்று வெளியே போகாது.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்நாட்டில் 3-வது அலை ஏற்பட்டாலும் இந்த ஆஸ்பத்திரிகள் நோயாளிகளை ஏற்றுக்கொள்ளும். இது தொடர்பாக பல்வேறு துறையினருடன் அரசு ஆலோசித்து வருகிறது.கொரோனாவின் 2-வது அலை உச்சத்தில் இருந்த கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 850 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் இருந்து அமைத்து வருகிறோம்.
இவ்வாறு சதீஷ் ரெட்டி கூறினார்.
தடுப்பூசி சேமிப்புஇதைப்போல கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை டி.எஸ்.டி. தலைவர் அசுத்தோஷ் சர்மாவும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்தார்.அவர் கூறுகையில், ‘நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தடுப்பூசிகளை சேமிக்கவும், கொண்டு செல்லவும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய சூழலுக்கு ஏற்ப தடுப்பூசிகளை சேமிப்பதற்கான புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார்.மேலும் தொற்றுநோயை எதிர்த்து போராடுவதில் செயற்கை நுண்ணறிவு அதிக அளவில் பங்களிக்கும் முறைகள் குறித்தும் அவர் விளக்கினார்.