நாட்டில் முதன்முறையாக பச்சை பூஞ்சை நோய் பாதித்த நபர் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்


நாட்டில் முதன்முறையாக பச்சை பூஞ்சை நோய் பாதித்த நபர் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்
x
தினத்தந்தி 16 Jun 2021 12:44 AM IST (Updated: 16 Jun 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் முதல் பச்சை பூஞ்சை நோய் பாதித்த நபர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.




இந்தூர்,

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட தொடங்கியது.  கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இந்த தொற்று எளிதில் பரவியது.  ஆம்போடெரிசின் மருந்து இதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நாட்டில், ஒரு சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது.  இது கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுத்தும் பாதிப்புகளை விட அதிக ஆபத்து நிறைந்தது என கூறப்பட்டது.  பின்னர் மஞ்சள் பூஞ்சை நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய நபர் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு 90 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அவருக்கு நடந்த பரிசோதனையில், பச்சை பூஞ்சை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.  கருப்பு பூஞ்சை நோயில் இருந்து இது வேறுபட்டது.

இதனை, இந்தூர் நகர சுகாதார துறையின் மாவட்ட தரவு மேலாளர் அபூர்வா திவாரி உறுதி செய்துள்ளார்.  நாட்டில் முதன்முறையாக இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.  இதனையடுத்து, அவரை மும்பை நகருக்கு சிகிச்சைக்காக விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

1 More update

Next Story