முதல் மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியிடப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு விமர்சனம்


முதல் மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதம் டுவிட்டரில் வெளியிடப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு விமர்சனம்
x
தினத்தந்தி 15 Jun 2021 11:18 PM GMT (Updated: 2021-06-16T04:48:17+05:30)

முதல் மந்திரி - கவர்னருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது என மேற்கு வங்க உள்துறை தெரிவித்துள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்தத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் சவால் அளித்தது. 

தேர்தலுக்கு பிறகு, பல இடங்களில் வன்முறை நடைபெற்றன. இதில் பாஜகவினர் திட்டமிட்டு தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தன்கர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறியிருந்தார். இவ்விவகாரங்கள் தொடர்பாக  மம்தா பானர்ஜிக்கும்  கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. 

இந்த நிலையில்,  முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு  கவர்னர் ஜெகதீப் தன்கர் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பங்கள் தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் முதல் மந்திரி மவுனம் காப்பதாகவும்,  சுதந்திரத்திற்கு பிறகான மோசமான சம்பவங்கள் இவை எனவும் கவர்னர்  கூறியிருந்தார். இந்தக் கடிதம் கவர்னரின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருந்தது. 

இதனால், கோபம் அடைந்த மேற்கு வங்காள அரசு கடுமையாக சாடியுள்ளது. மேற்கு வங்க உள்துறை அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,  பொது வெளியில் ஒரு தலைபட்சமாக வெளியிடப்பட்ட கடிதம் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது. அதில் உள்ள கருத்துக்கள் இட்டுக்கட்டப்பட்டவை. முதல் மந்திரிக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதம், ஊடகங்களுக்கும் கடிதம் டுவிட் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. முதல் மந்திரி - கவர்னருக்கு இடையேயான தகவல் தொடர்பின் புனிதத்தை சீர்குலைப்பதாக உள்ளது” என விமர்சிக்கப்பட்டுள்ளது. 


Next Story