முகுல் ராய்க்கு வழங்கி வந்த பாதுகாப்பை திரும்பப்பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம்

பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளராக செயல்பட்டுவந்த முகுல் ராய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
கொல்கத்தா,
பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்த முகுல் ராய் கடந்த 11-ம் தேதி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
67 வயதான முகுல் ராய் 1998 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகிய அவர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
1998 முதல் திரிணாமுல் காங்கிரசில் இருந்துவந்த முகுல் ராய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், இவர் சில பாஜக தலைவர்களையும் சந்தித்தார். இதனால், 2015 ஆம் ஆண்டு முகுல் ராயை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக தேசிய துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில், முகுல் ராய் கடந்த 11-ம் தேதி பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரசில் இணைந்த முகுல் ராய்க்கு அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளது.
திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததை தொடர்ந்து தனக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய பாதுகாப்பு படையினரை திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 12-ம் தேதி முகுல் ராய் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், முகுல் ராய் அனுப்பிய கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு வழங்கி வந்த மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை திரும்பப்பெற நேற்று உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் முகுல் ராய்க்கு வழங்கப்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு இன்று முதல் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்துள்ள முகுல் ராய்க்கு மேற்குவங்காள அரசு சார்பில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story