சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து: 12-ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு முறையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது


சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து: 12-ம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு முறையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது
x
தினத்தந்தி 18 Jun 2021 1:30 AM GMT (Updated: 18 Jun 2021 1:30 AM GMT)

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ.யின் மதிப்பெண் மதிப்பீடு முறையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது.

புதுடெல்லி, 

சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யக்கோரி, டெல்லியை சேர்ந்த மம்தா சர்மா தாக்கல் செய்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

கடந்த 3-ந்தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசு எடுத்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் வழங்கும் மதிப்பீடு விதிகள் குறித்த முடிவை இரண்டு வாரங்களுக்குள் எடுக்க சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ.க்கு அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூன் 17-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. வகுத்துள்ள மதிப்பெண் மதிப்பீடு முறை குறித்து விளக்கம் அளித்தார்.

குறிப்பாக சி.பி.எஸ்.இ., மாணவர்கள் 12-ம் வகுப்பில் பருவத்தேர்வு அல்லது அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவீதமும், 11-ம் வகுப்பில் பாடங்களுக்கு நடத்தப்பட்ட இறுதி தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30 சதவீதமும், 10-ம் வகுப்பில் மொத்தமுள்ள 5 பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களின் மதிப்பெண்களில் 30 சதவீதமும் கணக்கில் கொள்ளப்படும்.

மேலும் 12-ம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வு, அகமதிப்பீடு மதிப்பெண்கள் தொடர்பாக அந்தந்த பள்ளிகள் மாணவர்களுக்கு அளித்த மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்

ஒவ்வொரு பள்ளியும் 5 ஆசிரியர்களை கொண்ட தேர்வு முடிவுகளுக்கான குழுவை அமைக்கும்.

ஒரு பள்ளி கடந்த 3 ஆண்டுகளாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற தேர்வு முடிவுகள் கருத்தில் கொள்ளப்படும்.

தற்போது வகுத்துள்ள மதிப்பெண் மதிப்பீடு முறையில் தகுதி பெறாத மாணவர்கள் கம்பார்ட்மெண்ட் பிரிவில் வைக்கப்படுவார்கள்.

தற்போது வகுத்துள்ள மதிப்பெண் மதிப்பீடு முறையில் திருப்தி கொள்ளாத மாணவர்களுக்கு, கொரோனா பாதிப்பு பரவல் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பான சூழல் மேம்பட்ட உடன் தேர்வுகள் நடத்தப்படும். அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் இறுதியாக கொள்ளப்படும்.

2-வது முறையாக கம்பார்ட்மெண்ட் தேர்வு எழுதுபவர்களுக்கு, கொரோனா பாதிப்பு பரவல் கட்டுப்படுத்தப்பட்டு பாதுகாப்பான சூழல் மேம்பட்ட உடன் தேர்வுகள் நடத்தப்படும் என்றார்.

ஐ.சி.எஸ்.இ. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெ.கே. தாஸ், 10-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் சதவீதம், செய்முறைத் தேர்வு, அகமதிப்பீடு மதிப்பெண்கள், 11, 12-ம் வகுப்புக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் பெற்ற சிறந்த மதிப்பெண்கள் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும். பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து, பெற்றோர்கள் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி, நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நீதிபதிகள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யமுடியாது என தெரிவித்ததுடன், தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு சூழல் மேம்பட்ட உடன் அதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ.யின் மதிப்பெண் மதிப்பீடு முறையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கிறது.

மதிப்பெண்களில் திருத்தம் கோரி மாணவர்கள் முறையிடும் பட்சத்தில் அதற்கான குறை தீர்ப்பு வழிமுறைகளை உருவாக்க வேண்டும். தேர்வு முடிவுகள், விருப்பத் தேர்வுக்கான தேதி ஆகியவற்றை உள்ளடக்கி இறுதி செயல் திட்டத்தை சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. அறிவிக்க வேண்டும்.

மேற்படி உத்தரவுக்காக இந்த வழக்கு விசாரணை ஜூன் 21-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. நாளைக்குள் (இன்றைக்குள்) இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்க மூத்த வக்கீல் விகாஸ் சிங்குக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story