9 கின்னஸ் சாதனை படைத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஊழியர் அபாரம்


9 கின்னஸ் சாதனை படைத்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஊழியர் அபாரம்
x
தினத்தந்தி 21 Jun 2021 1:15 AM GMT (Updated: 2021-06-21T06:45:32+05:30)

கம்ப்யூட்டரில் தரவுகளை தட்டச்சு செய்வது மட்டுமல்ல சாதனைகளும் எளிதாக வருகிறது. கின்னஸ் சாதனைகளை படைப்பது என்பது, திருநெல்வேலி அல்வா சாப்பிடுகிறமாதிரி கொள்ளை இஷ்டமானது.

புதுடெல்லி, 

புகழ் பெற்ற டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருபவர் வினோத் குமார் சவுத்ரி (வயது 41). இவருக்கு கம்ப்யூட்டரில் தரவுகளை தட்டச்சு செய்வது மட்டுமல்ல சாதனைகளும் எளிதாக வருகிறது. கின்னஸ் சாதனைகளை படைப்பது என்பது, திருநெல்வேலி அல்வா சாப்பிடுகிறமாதிரி கொள்ளை இஷ்டமானது. அதனால்தான் 9 கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறார்.

2014-ம் ஆண்டு அவர் கம்ப்யூட்டரில் மூக்கினால் தட்டச்சு செய்வது, கண்களைக் கட்டிக்கொண்டு தட்டச்சு செய்வது, வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு அதன் மூலம் தட்டுச்சு செய்வது என எல்லாவற்றிலும் வேகம்... வேகம்.. என வேகம் காட்டி கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார்.

இது பற்றி அவர் கூறுகையில், “எனக்கு எதிலும் வேகம் காட்டுவது என்றால் அலாதியான பிரியம். நான் குழந்தையாக இருந்தபோதே விளையாட்டுகளில் ஊக்கமாக இருந்தேன். வளர்ந்த பின்னர் சில உடல்நல பிரச்சினைகளால் விளையாட்டில் ஆர்வத்தை தொடர முடியவில்லை. அதன்பின்னர் கம்ப்யூட்டரில் வேகம் காட்டுவதில் ஆர்வம் கொள்ளத்தொடங்கினேன். முதலில் 2014-ல் நான் எனது மூக்கினால் கம்ப்யூட்டரில் 103 எழுத்துகளை 46.30 வினாடிகளில் தட்டச்சு செய்தேன். இந்த வகையில் இத்தனை எழுத்துகளை இவ்வளவு விரைவாக டைப் செய்தது சாதனை” என்கிறார்.

மேலும், “நான் அந்த சாதனைக்கான சான்றிதழைப் பெற்றபோது, எனக்கு ஒரு வித்தியாசமான உந்துதலைத்தந்தது. மேலும் கூடுதல் சாதனை படைக்க பயிற்சியைத் தொடங்கினேன். அடுத்த ஓராண்டு காலம் தீவிரமாக பயிற்சி செய்தேன். 2016-ல் 2 சாதனைகளை படைத்தேன்” என நெகிழ்கிறார்..

இவரது 2-வது சாதனை, கண்களைக் கட்டிக்கொண்டு மிக வேகமாக அனைத்து எழுத்துகளையும் 6.71 வினாடிகளில் தட்டச்சு செய்தது ஆகும்.

2017-ல் இவர் தன் வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு, அதன்மூலம் அனைத்து எழுத்துகளையும் அதிவேகமாக 18.65 வினாடிகளில் தட்டச்சு செய்து சாதனை படைத்தார். அடுத்த ஆண்டு இதே சாதனையை 17.01 வினாடிகளில் செய்து காட்டினார்.

2019-ம் ஆண்டு அனைத்து எழுத்துகளையும் ஒற்றை விரலால் 29.53 வினாடிகளில் தட்டச்சு செய்து மற்றொரு சாதனை படைத்தார்.

இந்த கொரோனா ஊரடங்கில் இவர் தனது சமீபத்திய கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறார். அது ஒரு டென்னிஸ் பந்தை ஒரே நிமிடத்தில் 205 முறை கைகளால் தொட்டதாகும். இப்படி ஒரு சாதனை, கின்னஸ் சாதனையாக படைத்திருப்பது இதுவே முதல் முறையாம்.

Next Story