நாட்டில் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி


நாட்டில் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 21 Jun 2021 8:42 PM IST (Updated: 21 Jun 2021 8:42 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 69 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மிக முக்கிய பாதுகாப்பு கவசமாக தடுப்பூசி கருதப்படுகிறது. உலக அளவில் வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்தியாவில் கொரோனா 2-வது அலை குறையத்தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 3-வது அலை பாதிப்பை தடுப்பூசி போடுவதன் மூலம் கணிசமாக கட்டுப்படுத்த முடியும் என்று பரவலாக மருத்துவ நிபுணர்கள் கூறுவதால், தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக விநியோகிக்கும் எனவும் பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இந்தியாவில் நேற்று 30.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 69.25 லட்சம் பேருக்கு (மாலை 6 மணி நிலவரப்படி) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 கோடியை கடந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 69 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நாட்டில் இன்று கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். அதிகப்படியான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கடினமாக உழைக்கும் முன்கள பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள். சிறப்பாக செயல்படுகிறோம் இந்தியா’ என தெரிவித்துள்ளார். 



Next Story