அஜித்பவார் பங்கேற்ற விழாவில் அதிக கூட்டம்: தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்பட 6 பேர் கைது


அஜித்பவார் பங்கேற்ற விழாவில் அதிக கூட்டம்: தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்பட 6 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 10:45 PM GMT (Updated: 21 Jun 2021 10:45 PM GMT)

அஜித்பவார் பங்கேற்ற விழாவில் அதிக கூட்டம் கூடியதாக தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

புனே, 

துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்ட விழாவில் அதிக கூட்டம் திரண்ட சம்பவத்தில் போலீசார் தேசியவாத காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்பட கட்சியினர் 6 பேரை கைது செய்தனர்.

புனே சிவாஜிநகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா நடந்தது. துணை முதல்-மந்திரி அஜித்பவார் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அந்த பகுதியில் அதிக கூட்டம் கூடியது.

மேலும் பலர் முககவசம் அணியாமல், சமூகஇடைவெளியை பின்பற்றாமல் இருந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிவாஜிநகர் போலீசார், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேசியவாத காங்கிரஸ் புனே மாவட்ட தலைவர் பிரசாந்த் ஜக்தாப் மற்றும் 5 கட்சி நிா்வாகிகளை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், விழா ஏற்பாடு செய்தவர்கள் 100 முதல் 150 பேர் கலந்து கொள்வார்கள் என கூறி அனுமதி வாங்கியிருந்தனர். ஆனால் விழாவில் 500 பேர் திரண்டுவிட்டனர் என்றார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story