கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரப்படவில்லை: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்


கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரப்படவில்லை: சுகாதாரத்துறை மந்திரி சுதாகர்
x
தினத்தந்தி 22 Jun 2021 2:43 PM GMT (Updated: 2021-06-22T20:13:11+05:30)

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரப்படவில்லை என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறினார்.

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குழந்தைகளை வேகமாக தாக்கும்

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் பள்ளி-கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று ஒருபுறம் குரல் வலுத்து வருகிறது. இன்னொருபுறம் பெற்றோர், தற்போதைக்கு பள்ளிகளை திறக்கக்கூடாது என்று கூறுகிறார்கள். பள்ளிகளை திறக்கும் விவகாரம் சிக்கலானது. அதனால் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டவில்லை. குழந்தைகளுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவர்களின் உடல் நலனும் முக்கியம். பள்ளிகளை திறப்பதற்கு முன்பு அதன் சாதக-பாதகங்கள் குறித்து ஆராய்ந்த பிறகே முடிவு எடுக்கப்படும். கொரோனா வைரஸ், குழந்தைகளை வேகமாக தாக்கும். அதனால் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதுகுறித்து ஆழ்ந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி

டாக்டர்கள், நர்சுகள் நியமனம் செய்யப்பட வேண்டும். அதற்கு போதிய காலஅவகாசம் வழங்க வேண்டும். எங்களுக்கு குழந்தைகளின் நலன் தான் முக்கியம். எந்த அழுத்தத்திற்கும் பணிந்து நாங்கள் பள்ளி-கல்லூரிகளை திறக்க மாட்டோம். நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தான் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மருத்துவ நிபுணர் குழு 14 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கையில் கூறப்படும் பரிந்துரைகள் அடிப்படையில் தான் அரசு முடிவு எடுக்கும். பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் இந்தியா உலக அளவில் சாதனை படைத்துள்ளது. நமது நாட்டில் தடுப்பூசி போடும் அளவுக்கு வேறு எந்த நாட்டிலும் போடுவது இல்லை.

எதிர்பார்ப்பை மீறி...

நாட்டில் அதிக தடுப்பூசிகள் போடுவதில் கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது. நமது நாட்டில் தடுப்பூசிகள் குறைவாக வழங்குவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் தற்போது உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இனியாவது எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்வதை நிறுத்த வேண்டும். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 7 லட்சம் டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து இருந்தோம். ஆனால் 10.67 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எங்களின் எதிர்பார்ப்பை மீறி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.


Next Story