4 மாநிலங்களில் டெல்டா வைரஸ்: கட்டுபாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்


4 மாநிலங்களில் டெல்டா வைரஸ்: கட்டுபாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jun 2021 11:57 AM IST (Updated: 23 Jun 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியம், மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 40 பேருக்கு டெல்டா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது.

இந்தியாவில் அந்த வகையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, இந்த டெல்டா வைரஸ் தற்போது உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ் டெல்டா-பிளஸ் என அழைக்கப்படுகிறது.

இந்தப் புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’ பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது. இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா-பிளஸ் கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், டெல்டா பிளஸ் வைரஸ் மராட்டியம், கேரளா, மத்தியப் பிரதேசம் தமிழ்நாடு மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

இந்தியாவில் இதுவரை 40 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மராட்டியம் ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இன்சாகோக்கால் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேற்கண்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்குமாறும் பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் 4 மாநிலங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தேவையான பரிசோதனைகளை செய்து மேலும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் போதுமான அளவு மாதிரிகளை இன்சாகோக் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு முறையாக அனுப்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story