‘எதிர்க்கட்சி தலைவர்களை டுவிட்டரில் மட்டுமே காண முடிகிறது’ - ஜே.பி.நட்டா


‘எதிர்க்கட்சி தலைவர்களை டுவிட்டரில் மட்டுமே காண முடிகிறது’ - ஜே.பி.நட்டா
x
தினத்தந்தி 24 Jun 2021 1:53 AM GMT (Updated: 24 Jun 2021 1:53 AM GMT)

எதிர்க்கட்சி தலைவர்களை மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை என்றும் டுவிட்டரில் மட்டுமே காண முடிகிறது என ஜே.பி.நட்டா கூறினார்.

புதுடெல்லி, 

பா.ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பா.ஜனதா சார்பில் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சிகளை கடுமையாக குற்றம் சாட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதாவை தவிர பிற கட்சிகள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளன. சில கட்சிகள் அவசர சிகிச்சை பிரிவில் கூட இருக்கின்றன. இந்த நாட்களில் எதிர்க்கட்சி தலைவர்களை மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை. டுவிட்டர் தளத்திலும், செய்தியாளர் சந்திப்புகளிலும்தான் காண முடிகிறது.

கொரோனா தடுப்பூசி தொடர்பாக காங்கிரஸ் கட்சி, மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஆனால் எந்தவொரு காங்கிரஸ் தலைவராவது, தடுப்பூசி போடவில்லை என்று கூறுகிறார்களா? அவர்கள் மட்டும் அமைதியாக தடுப்பூசியை போட்டு வருகிறார்கள்.

முன்னதாக சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘சியாமா பிரசாத் முகர்ஜியின் உன்னத இலட்சியங்கள், வளமான எண்ணங்கள் மற்றும் மக்களுக்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும். தேசிய ஒருங்கிணைப்புக்கான அவரது முயற்சிகள் ஒருபோதும் மறக்கப்படாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Next Story