அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் கோர்ட்டிற்கு வந்தார் ராகுல் காந்தி


அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் கோர்ட்டிற்கு வந்தார் ராகுல் காந்தி
x
தினத்தந்தி 24 Jun 2021 5:24 AM GMT (Updated: 2021-06-24T12:57:45+05:30)

அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் கோர்ட்டிற்கு ராகுல் காந்தி வந்தடைந்தார்.

சூரத்,

கர்நாடகாவின் கோலாரில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நடந்த பிரசார கூட்டத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார். 

அதில் அவர் பேசும்போது, ‘நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எப்படி எல்லாரும் பொதுவான குடும்ப பெயரில் (மோடி) வருகின்றனர். அனைத்து திருடர்களும் மோடியை பொதுவான குடும்ப பெயராக கொண்டிருப்பது எப்படி?’ என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பர்னேஷ் மோடி என்ற எம்.எல்.ஏ., ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையே இழிவுபடுத்தி விட்டதாக கூறி அவர் மீது குற்ற அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தனது இறுதி வாக்குமூலத்தை சமர்ப்பிப்பதற்காக ஜூன் 24-ந் தேதி (இன்று) ராகுல் காந்தி மீண்டும் ஆஜராக வேண்டும் என சமீபத்தில் நீதிபதி ஏ.என்.தவே உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) சூரத் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராக உள்ளதாக மாநில காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், அவதூறு வழக்கு விசாரணைக்காக குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் கோர்ட்டிற்கு ராகுல் காந்தி இன்று வந்தடைந்தார்.

Next Story