கொரோனா 3-வது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது - மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரி தகவல்


கொரோனா 3-வது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது - மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2021 11:27 AM IST (Updated: 24 Jun 2021 11:27 AM IST)
t-max-icont-min-icon

கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்றினால், கொரோனாவின் 3-வது அலை பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று, இதுவரையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2.2 சதவீதத்தினரை பாதித்துள்ளது. இது இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் 97 சதவீத மக்களைப் பாதுகாப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் பாதுகாப்பு அம்சங்களை கை விட்டு விட முடியாது. கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது முக்கியம்.

நாம் கட்டுப்படுத்துவதுடன், கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றினால் 3-வது அலை வந்தாலும், அது சுகாதார அமைப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தில் எதிர்கொள்ளும் சவாலில் ஒன்று, தடுப்பூசி தொடர்பான தயக்கம்தான். கொரோனா தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகள், வதந்திகள், சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவல்கள் காரணமாக பல பயனாளிகள் குறிப்பாக கிராமப்புறங்களிலும், பழங்குடியினர் பகுதிகளிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தவறி உள்ளனர்.

தடுப்பூசிகள் பற்றிய கட்டுக்கதைகளை உடைத்து, கொரோனா கால பொருத்தமான நடத்தையின் பங்கு பற்றி சமூகத்துக்கு நினைவுபடுத்துவதும் முக்கியமானது. இது பரவல் சங்கிலியை உடைப்பதில் முக்கியமானது ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story