தொடர்ந்து பிளஸ் 2 தேர்வை நடத்த வலியுறுத்தி வரும் ஆந்திரா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை


தொடர்ந்து பிளஸ் 2 தேர்வை நடத்த வலியுறுத்தி வரும் ஆந்திரா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Jun 2021 8:12 AM GMT (Updated: 24 Jun 2021 8:15 AM GMT)

தொடர்ந்து பிளஸ் 2 தேர்வை நடத்த வலியுறுத்தி வரும் ஆந்திரா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது

புதுடெல்லி

கொரோனா பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2  தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குழுவின் பரிந்துரைப்படி, பிளஸ் 2வில்  நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத  மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீத  மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல தனித் தேர்வர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கொரோனா சூழல் சீரடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இந்த முறைக்குக் கடந்த 17-ம் தேதி சுப்ரீம் கோர்ட்  அனுமதி வழங்கியது.

இதையடுத்து, பல்வேறு கல்வி வாரியங்களும் சிபிஎஸ்இ மாணவர்களும் பெற்றோர்களும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் மதிப்பெண் கணக்கீட்டு முறையை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கூறியும் சுப்ரீம் கோர்ட்டில்  மனுத்தாக்கல் செய்தனர். எனினும், பல்வேறு தரப்பில் இருந்தும் ஆலோசனைகளைப் பெற்று, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. எனவே அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றுகூறி மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்  தள்ளுபடி செய்தது.

தற்போது வரை 21 மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. 6 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வவு முன் விசாரணைக்கு வந்தது.

அதில் நீதிபதிகள் கூறும்போது, ''சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி வாரியங்கள் இரண்டு வார இடைவெளியில் மதிப்பெண் கணக்கீட்டு முறையைச் சமர்ப்பித்ததுபோல, பிற மாநிலக் கல்வி வாரியங்களும் மதிப்பீட்டு முறையை விரைவில் இறுதி செய்யவேண்டும். இன்றில் இருந்து 10 நாட்களுக்கு உள்ளாக சுப்ரீம் கோர்ட்டிடம்  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அக மதிப்பீட்டு முறையை இறுதி செய்து, ஜூலை 31-ம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

பிற மாநிலங்கள் பிளஸ் 2 தேர்வை ரத்துசெய்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று கேட்பது ஏன்? பெருந்தொற்றுச் சூழல் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்த அறிக்கையை ஆந்திர அரசு தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால் கூட அதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிடுவோம்'' என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் இது தொடர்பாக நாளை (ஜூன் 25) மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story