கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் தயாரித்த புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்


கூகுளுடன் இணைந்து ரிலையன்ஸ் தயாரித்த புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 25 Jun 2021 1:23 AM IST (Updated: 25 Jun 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை தயாரித்து உள்ளது. இது உலக அளவில் மிகவும் மலிவானதாக இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ.33,737 கோடி முதலீடு செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் அறிவித்து இருந்தது.

இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனமும், ரிலையன்ஸ் ஜியோவும் இணைந்து புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று அறிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 44-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இதை அவர் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவை 2ஜி இல்லாத நாடாக மாற்றுவதற்கு மிகவும் மலிவு வாய்ந்த 4ஜி ஸ்மார்ட்போன் அவசியம். நாட்டில் வேகமற்ற மற்றும் 2ஜி சேவைகளிலிருந்து தப்பிக்க இயலாத 30 கோடிக்கும் அதிகமான செல்போன் பயனாளர்கள் உள்ளனர். ஏனெனில் பெரும்பாலான அடிப்படை 4ஜி ஸ்மார்ட்போன்கள் அதிக விலை கொண்டவை ஆகும்.இந்த சூழலில் கூகுள் மற்றும் ஜியோ குழுவினர் இணைந்து உருவாக்கிய ஒரு உண்மையான திருப்புமுனையை உருவாக்கும் ஸ்மார்ட்போன் குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதை நாங்கள் ‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ என்று அழைக்கிறோம். இந்திய சந்தைக்காக பிரத்யேமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் 10-ந்தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி முதல் கடைகளில் கிடைக்கும். ஜியோவிடம் நீங்கள் எதிர்பார்ப்பது போல, ஜியோபோன் நெக்ஸ்ட், இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாக இருக்கும்.

ஒரு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஒரு தேசிய தொழில்நுட்ப சாம்பியன் இணைந்து ஒரு திருப்புமுனை தயாரிப்பை உருவாக்க கூட்டாக பணியாற்றியதன் சான்றாக இது விளங்குகிறது. இந்த போன் முதலில் இந்தியாவிலும், பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

இவ்வாறு முகேஷ் அம்பானி கூறினார்.

ஜியோபோன் நெக்ஸ்டில், அதிநவீன கேமரா, குரல் உதவியாளர், மொழிபெயர்ப்பு, திரையில் தோன்றும் உரையை தானாகவே சத்தமாக ஒலிக்கும் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டு வசதி உள்ளிட்ட அதிநவீன அம்சங்கள் அடங்கியுள்ளன. இதில் கூகுளின் அனைத்து செயலிகளும், ஜியோ செயலிகளும், ஆண்ட்ராய்டு பயன்பாடுகளையும் பெற முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story