கனவில் வந்து பாலியல் பலாத்காரம் செய்வதாக பூசாரி மீது இளம் பெண் புகார்- போலீசார் அதிர்ச்சி


கனவில் வந்து பாலியல் பலாத்காரம் செய்வதாக பூசாரி மீது இளம் பெண் புகார்- போலீசார் அதிர்ச்சி
x
தினத்தந்தி 25 Jun 2021 12:29 PM GMT (Updated: 2021-06-25T17:59:34+05:30)

கனவில் வந்து பாலியல் பலாத்காரம் செய்வதாக பூசாரி ஒருவர் மீது இளம் பெண் புகார் அளித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.

பாட்னா

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்  இளம் பெண். இவர் மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவரை குணமாக்க  அங்குள்ள காளி கோயில் பூசாரி பிரசாந்த் சதுர்வேதி என்பவரை சந்தித்தார். அவர் ஒரு மந்திரத்தை சொல்லிக் கொடுத்து, சில சடங்கு முறைகளை பின்பற்றுமாறு கூறினார். மகன் குணமாகிவிடுவான் என்ற நம்பிக்கையில், அதைச் செய்தார் ஆனால்  15 நாட்களில் அவர் மகன் இறந்து விட்டார்.

இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷன் சென்ற அந்தப் பெண், பூசாரி சதுர்வேதி, தனது கனவில் வந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் இறந்து போன தனது மகன் தான் தன்னைக் காப்பாற்றியதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த  போலீசாரிடம் அந்தப் பெண் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், சதுர்வேதி தொடர்ந்து தனது கனவில் வருவதாகவும், பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிர்ச்சியான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி அஞ்சனி குமார் கூறும்போது, “சதுர்வேதிக்கு எதிராக எழுத்துப்பூர்வமாக புகார் வந்ததால், அந்தப் பெண்ணை சமாதானப்படுத்துவதற்காக, நாங்கள் அவரை அழைத்து வந்து விசாரித்தோம். ஆனால், அந்த பெண் யாரென்று தெரியவில்லை என சதுர்வேதி மறுத்தார். மகன் இறந்துபோன துக்கத்தில் அந்த பெண் மனநிலை சரியில்லாதவர் போல் இருக்கிறார்’ என்று கூறினார். அந்தப் பெண் கொடுத்த இந்த பகீர் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story