சுகாதாரம், சிறுதொழில், சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.6¼ லட்சம் கோடி சலுகைகள்; மத்திய அரசு அறிவிப்பு


சுகாதாரம், சிறுதொழில், சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.6¼ லட்சம் கோடி சலுகைகள்; மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2021 7:47 PM GMT (Updated: 2021-06-29T01:17:32+05:30)

கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை சீர்செய்ய சுகாதாரம், சிறுதொழில், சுற்றுலா உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.6¼ லட்சம் கோடி சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா முதலாவது அலை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தலை காட்டியது.

தற்சார்பு இந்தியா
மார்ச் மாதத்தில் கொரோனா விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. சுற்றுலா துறை திக்கப்பட்டது.
தொழில்துறையை பாதிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்காக, கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு ‘தற்சார்பு இந்தியா’ என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள சலுகைகளை அறிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போல் தாக்கத் தொடங்கியது. மறுபடியும் பொருளாதார நடவடிக்கைகள் முடங்கின. தற்போது, இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.

நிர்மலா சீதாராமன்
பொருளாதார நடவடிக்கைகள் மீண்டுவரத் தொடங்கி உள்ளன. அதே சமயத்தில், தொழில்துறையை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில், மத்திய அரசு நேற்று மொத்தம் ரூ.6 லட்சத்து 29 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் பத்திரிகையாளர்களிடையே இதை அறிவித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது 8 நிவாரண நடவடிக்கைகளையும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான 8 நடவடிக்கைகளையும் அறிவிக்கிறேன்.

கடன் உத்தரவாதம்

* அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மீட்டெடுக்க ரூ.1 லட்சத்து 10 கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும். இவற்றில் சுகாதார துறைக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். 3 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் ஒரே கடனாக தலா ரூ.100 கோடி வீதம் வழங்கப்படும். இதற்கான வட்டி விகிதம் 7.95 சதவீதமாக இருக்கும்.

* நுண்கடன் நிதி நிறுவனங்கள், தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை சிறிய அளவிலான கடன்களை 25 லட்சம் பேருக்கு வழங்கும். இதற்கான வட்டி விகிதம் வழக்கமான அளவை விட 2 சதவீதம் குறைவாக இருக்கும். இதற்கு ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவிடப்படும்.

சுற்றுலா, ஓட்டல் போன்ற துறைகளுக்கான கடன் வட்டி விகிதம் 8.25 சதவீதமாக இருக்கும். கொரோனா காலத்தில் பணமின்றி தவிக்கும் துறைகளுக்கு இது பயனுள்ளதாக அமையும்.

குழந்தைகள் சிகிச்சை

* புதிய பொது சுகாதார திட்டத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி செலவிடப்படும். ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் படுக்கைகள் அமைக்கப்படும்.

* தற்சார்பு இந்தியா சலுகை அறிவிப்பில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் கோடி கடன் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்கீழ் கூடுதலாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும்.எனவே, இத்திட்டத்தின் கடன் உச்சவரம்பு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்கிறது. இதில், சிறிய தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் பிணையில்லா கடன் வழங்கும். அந்த நிறுவனங்களுக்கு அரசு உத்தரவாதம் வழங்கும்.

சுற்றுலா

* கொரோனா காலமாக இருப்பதால், நவம்பர் மாதம் வரை ஏழைகளுக்கு ரேஷன் கடைகளில் கூடுதல் உணவு தானியம் வழங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ரூ.93 ஆயிரத்து 869 கோடி செலவில் இத்திட்டம் 
நிறைவேற்றப்படும்.

* சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக, சுற்றுலா நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வரையும், பதிவு செய்யப்பட்ட 11 ஆயிரம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வரையும் கடன் வழங்கப்படும்.

பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு இந்தியாவுக்கு வரும் முதலாவது 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.100 கோடி செலவு ஏற்படும்.

பிராட் பாண்ட்

* நடப்பு ‘ராபி’ பருவத்தில் கோதுமை கொள்முதல் எப்போதும் இல்லாத அளவாக 4 கோடியே 32 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. விவசாயிகள் டி.ஏ.பி. மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் நேரடியாக வாங்க கூடுதலாக ரூ.14 ஆயிரத்து 775 கோடி மானியம் வழங்கப்படும். இதனால் மொத்த உர மானியம் ரூ.42 ஆயிரத்து 275 கோடியாக உயரும்.

* அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட் பாண்ட் (அகண்ட அலைவரிசை) இணையதள இணைப்பு அளிக்க ரூ.19 ஆயிரத்து 41 கோடி செலவிடப்படும். இத்தொகை 2 ஆண்டுகளுக்கு பயன்படுத்தப்படும்.

* ஆத்ம நிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின்படி, புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும்.

* சரக்கு ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.88 ஆயிரம் கோடி செலவில் காப்பீட்டு திட்டம் நிறைவேற்றப்படும். பெரிய அளவிலான மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.

ரூ.6¼ லட்சம் கோடி

* பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மின் வினியோக சீர்திருத்தங்கள் ரூ.97 ஆயிரத்து 631 கோடி செலவில் 2025-2026 நிதியாண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

* தேசிய ஏற்றுமதி காப்பீட்டு கணக்குக்கு (என்.இ.ஐ.ஏ.) 5 ஆண்டுகளுக்கு கூடுதலாக நிதி் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.33 ஆயிரம் கோடி நிதி அறிவிக்கப்படுகிறது.

* வடகிழக்கு பிராந்திய வேளாண் வாணிப கழகத்துக்கு புத்துயிரூட்ட ரூ.77 கோடி ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த சலுகை தொகுப்புகளின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்து 28 ஆயிரத்து 993 கோடி ஆகும்.

Next Story