ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் ஊகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் முழுவதும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியாவை பொறுத்தவரை கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் கொரொனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும்.
இந்நிலையில், தற்போது பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்டநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஆய்வக பரிசோதனை தேவையில்லை என்று மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story