டெல்லி லட்சுமி நகர் சந்தையை ஜூலை 5 வரை மூட டெல்லி மாநகராட்சி உத்தரவு


டெல்லி லட்சுமி நகர் சந்தையை ஜூலை 5 வரை மூட டெல்லி மாநகராட்சி உத்தரவு
x
தினத்தந்தி 30 Jun 2021 8:27 AM GMT (Updated: 30 Jun 2021 8:27 AM GMT)

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதால் டெல்லி லட்சுமி நகர் சந்தையை மூடுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் உச்சம் பெற்றிருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

இதனையடுத்து டெல்லியில் அமல்படுத்தபட்டிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மார்க்கெட் பகுதிகளிலும், கடை வீதிகளிலும் பொது மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சென்று வருவதால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் டெல்லி லட்சுமி நகர் பல்பொருள் சந்தையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து லட்சுமி நகர் சந்தையை, ஜூலை 5 ஆம் தேதி வரை மூடுவதற்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இந்த தடைக்காலத்தின் போது அந்த பகுதியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story