கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை வருமா? மத்திய அரசு விளக்கம்


கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை வருமா? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 1 July 2021 1:27 AM GMT (Updated: 1 July 2021 1:27 AM GMT)

கொரோனா தடுப்பூசியால் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மலட்டுத்தன்மை வரும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பூசி திட்டம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் வேளையில் இந்த தடுப்பூசியால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பக்க விளைவாக மலட்டுத்தன்மை வருமா என்ற கேள்வியும் எழுந்தது. பாலூட்டும் தாய்மார்கள் இந்த தடுப்பூசி போடலாமா எனவும் கேள்வி எழுந்தது.

இதுகுறித்த தகவல்கள் பல ஊடகங்களில் வெளியாகின.

இதற்கு திட்டவட்டமான பதிலை மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில், அடிக்கடி எழும் கேள்விகளுக்கான பதில்கள் பகுதியிலும் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தற்போது நடைமுறையில் இருந்து வருகிற எந்தவொரு தடுப்பூசியும் ஆண்களுக்கோ, பெண்களுக்கோ கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தாது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி காரணமாக மலட்டுதன்மை நேரலாம் என்ற கட்டுக்கதையை மறுக்கிற விதத்தில், மத்திய அரசு தெளிவும் படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தடுப்பூசி ஆண்கள் மற்றும் பெண்களில் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை” என்று கூறி உள்ளது. தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, பயனுள்ளவை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி சுகாதார அமைச்சகம் மேலும் கூறுகையில், “சமீபத்தில் கோவிட்-19 நோய்த்தடுப்பு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா அளித்த ஒரு பேட்டியின்போது இதுகுறித்த அச்சங்களையும், குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார். அப்போது அவர், போலியோ தடுப்பு மருந்து இந்தியாவில் வழங்கும்போது இதேபோன்ற தகவல்கள் உருவாக்கப்பட்டன. அதை எடுத்துக்கொள்கிற குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை வரலாம் என கூறப்பட்டது. எல்லா தடுப்பூசிகளும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு தீவிரமாக உட்படுத்தப்படுகின்றன, இதுபோன்ற பக்க விளைவு எந்த தடுப்பூசியிலும் கிடையாது என தெளிவுபடுத்தினார்” என சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.

அத்துடன், கொரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு, பாலூட்டும் அனைத்து தாய்மார்களும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்துள்ளது என்றும், தடுப்பூசி போடுவதற்கு முன்போ, போட்ட பின்போ குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த தேவையில்லை, தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் கூறி உள்ளது.

Next Story