டெல்டா பிளஸ் கொரோனா பரவும் வேகம்; கூடுதல் தரவுகள் தேவை - எய்ம்ஸ் இயக்குநர் கருத்து

டெல்டா பிளஸ் கொரோனா வேகமாக பரவும் என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் கொரோனா இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் தற்போது கொரோனா வைரஸ் கிருமியின் உருமாற்றம் அடைந்த ‘டெல்டா பிளஸ்’ என்ற நோய்த்தொற்றானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஒருசில இடங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்புகள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த டெல்டா பிளஸ் வகை கொரோனா குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், டெல்டா பிளஸ் கொரோனா தொற்று வேகமாக பரவும் என்பதை உறுதி செய்ய கூடுதல் தரவுகள் தேவை என்று தெரிவித்து உள்ளார். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி டெல்டா பிளஸ் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story