மேகதாது திட்டத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை - கர்நாடக துணை முதல்-மந்திரி பேட்டி

மேகதாது திட்டத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் ரகசிய கூட்டணி அமைத்து செயல்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களுக்கு நல்ல விஷயங்கள் பேசும் பழக்கம் இல்லை. ஜனதா தளம் (எஸ்) எங்களுக்கு எதிர்க்கட்சி. காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் தான் ரகசிய கூட்டணி அமைத்து செயல்படுகின்றன.
மேகதாது திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த திட்டத்தை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. இதில் இருந்து பின்வாங்க மாட்டோம்.
இந்த திட்டத்திற்கு அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றிய ரமேஷ் ஜார்கிகோளி இந்த அனுமதிகளை பெறுவதில் வெற்றி கண்டார். சிறிய அளவிலான அனுமதிகள் தான் பாக்கி உள்ளன. கர்நாடக நிதி நிலை அறிக்கையில் இந்த திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக முதல்-அமைச்சரின் ஒத்துழைப்பை பெற கர்நாடக அரசு முயற்சி செய்தது. கர்நாடகத்தின் பங்கு தண்ணீரை மட்டுமே நாங்கள் பயன்படுத்தி கொள்கிறோம். தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீட்டு நீரை நாங்கள் எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டோம்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.
Related Tags :
Next Story