தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு


தகவல் ஆணையங்களில் காலி பணியிடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 8 July 2021 4:58 AM IST (Updated: 8 July 2021 4:58 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் தற்போதைய காலி பணியிடங்கள், நிலுவையில் உள்ள தகவல் அறியும் விண்ணப்பங்கள் குறித்த அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு
மத்திய, மாநில தகவல் ஆணையங்களில் தகவல் ஆணையர்கள் நியமனத்தில் ஏற்படும் காலதாமதத்தாலும், நியமிக்காததாலும் தகவல் அறியும் விண்ணப்பங்கள் ஏராளமாக தேங்கியுள்ளன. கேட்கப்படும் தகவல்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது என தெரிவித்து, மனுதாரர் அஞ்சலி பரத்வாஜ் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய தகவல் ஆணையத்தின் தகவல் ஆணையர்களின் நியமனம் குறித்தகாலத்திலும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என தெரிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு
இந்த தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவித்து மீண்டும் அஞ்சலி பரத்வாஜ் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தங்கள் உத்தரவு தொடர்பான நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 6-ந் தேதி உத்தரவிட்டது.மேலும் மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள தகவல் ஆணையர் பதவிகளை 3 மாதங்களுக்குள் நிரப்பவும் அவகாசம் அளித்தது.

இடைக்கால மனு
இந்நிலையில், இந்த வழக்கின் மனுதாரர் அஞ்சலி பரத்வாஜ் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதில், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்தத் தவறிவிட்டது. தகவல் ஆணையர்களின் நியமன நடைமுறைகள் 3 மாதங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என பொய்யான தகவல் மத்திய அரசு பிரமாணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

மத்திய அரசு வாதம்
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும், மத்திய தகவல் ஆணையத்தில் 3 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே விரிவான பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான் ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று, மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக இருந்த பணியிடங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிரப்பப்பட்டுள்ளன. மனுதாரருக்கு உள்ள கேள்விகள் குறித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடுங்கள். அதற்கு மத்திய அரசு பதில் அளிக்கும் என வாதிட்டார்.

உத்தரவு
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மத்திய தகவல் ஆணையத்தில் நியமனம் தொடர்பாக தற்போதுள்ள நிலவரம், நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்த அறிக்கையை மத்திய அரசு 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதுபோல மாநிலங்களும் அவற்றின் தகவல் ஆணையம் தொடர்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story