இறக்குமதி மூலம் தடுப்பூசி கையிருப்பை அதிகரிக்க தீவிர முயற்சி - மத்திய அரசு தகவல்

இறக்குமதி மூலம் தடுப்பூசி கையிருப்பை அதிகரிக்க தீவிர முயற்சி செய்துவருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அறிந்தம் பக்சி நேற்று இணையவழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதில் மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயத்தில், இறக்குமதி மூலம் தடுப்பூசி கையிருப்பை அதிகரிக்க தீவிரமாக முயன்று வருகிறோம்.
இதனால், சமீப வாரங்களாக தடுப்பூசி போடும் பணியின் வேகம் அதிகரித்துள்ளது. 3 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதுவரை 36 கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்திய கண்டுபிடிப்பான கோவேக்சின் தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் ஏற்படும் முன்னேற்றத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. அதுபோல், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளை ஒவ்வொரு நாடும் அங்கீகரிக்கும் என்று நம்புகிறோம்.
தடுப்பூசி பணிக்காக உருவாக்கப்பட்ட ‘கோவின்’ வலைத்தளம் தொழில்நுட்பத்தை இலவசமாக அளிப்பது பற்றி பிற நாடுகளுடன் பேசி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story