ஆகாஷ் ஏவுகணைகளை வாங்குவதற்காக ரூ.499 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் ஆகாஷ் ஏவுகணை தயாரித்து வழங்க ரூ.499 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டம் (IGMDP) மூலமாக இந்திய விமானப்படைக்கு ரூ.499 கோடி மதிப்பீட்டில் ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துடன் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆகாஷ் ஏவுகணைகளுக்கான எலெக்ட்ரானிக் கருவிகளை தயாரித்து வழங்க மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.5,357 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இந்திய விமானப்படைக்கு ஆகாஷ் ஏவுகணைகளை தயாரித்து வழங்க மேலும் 499 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், வானிலிருந்து தரை இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை தயாரித்து ராணுவம் விமானப்படை ஆகியவற்றுக்கு பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது பாரத் டைனமிக்ஸ் தயாரிக்க உள்ள ஆகாஷ் ஏவுகணை 720 கிலோ எடை கொண்டதாகும். இது 60 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை சுமந்து கொண்டு 30 கி.மீ. தொலைவு வரை உள்ள இலக்கை தாக்கி அளிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story