கே.ஆர்.எஸ் அணையை நேரில் பார்வையிடுவேன்: சுமலதா அம்பரீஷ் எம்.பி. அறிவிப்பு

சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்றும், கே.ஆர்.எஸ். அணையை நேரில் பார்வையிடுவேன் என்றும் சுமலதா அம்பரீஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கண்ணீர் விட்டு வெற்றி
மண்டியாவில் சட்டவிரோதமாக கல்குவாரிகள் நடப்பதாகவும், கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாகவும் சுமலதா அம்பரீஷ் எம்.பி. குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சுமலதாவுக்கும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மண்டியா தொகுதிக்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கண்ணீர் சிந்தி சுமலதா வெற்றி பெற்று எம்.பி. ஆனார். இனிமேல் கண்ணீர்விட்டு வெற்றி பெற முடியாது என்று ஜனதாதளம் (எஸ்) கட்சி எம்.எல்.ஏ. ரவீந்திரா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் நேற்று சுமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-
போராட்டம் தொடரும்
என்னை பற்றி ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள். அவர்களது பேச்சு பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. மண்டியா மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். மணடியாவில் நடைபெறும் சட்டவிரோத கல்குவாரிகளுக்கு எதிராக என்னுடைய போராட்டம் தொடரும்.அதனை நான் நிறுத்த மாட்டேன். சட்டவிரோத கல்குவாரிகள் நடந்த இடத்தை அதிகாரிகளுடன் சென்று நேரில் பார்வையிட்டுள்ளேன்.
அணையை நேரில் பார்வையிடுவேன்
அதுபோல், கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக நான் கூறியுள்ளேன். இதுதொடர்பாக அதிகாரிகள் எனக்கு அளித்த அறிக்கையை அளிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் சான்றிதழ் வேண்டும் என்று கூறுகின்றனர். கே.ஆர்.எஸ். அணையை நேரில் பார்வையிட முடிவு செய்துள்ளேன். தற்போது கே.ஆர்.எஸ். அணையை பார்வையிட அனுமதியில்லை. இதற்காக அதிகாரிகளுடன் முறையான அனுமதி பெற்று கே.ஆர்.எஸ். அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வேன்.வருகிற 10-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 13-ந் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க செல்ல உள்ளேன். நான் காணாமல் போய் விட்டதாக எனக்கு எதிராக ஒரு கட்சியினர் வதந்தி பரப்புவார்கள். இதனை மண்டியா மக்கள் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு சுமலதா கூறினார்.
Related Tags :
Next Story