கே.ஆர்.எஸ். அணை விவகாரத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தேவையற்றது: டி.கே.சிவக்குமார்


கே.ஆர்.எஸ். அணை விவகாரத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தேவையற்றது: டி.கே.சிவக்குமார்
x
தினத்தந்தி 12 July 2021 2:38 AM GMT (Updated: 12 July 2021 2:38 AM GMT)

கே.ஆர்.எஸ். அணை விவகாரத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தேவையற்றது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தன்னுடைய வீட்டில் நேற்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

திட்டுவது சகஜமானது
மண்டியா மாவட்டத்திற்கு நான் சென்றிருந்த போது எனது தோள் மீது கையை போட முயன்றவரை திட்டியதுடன், அவரை பலமாக அடித்தது உண்மை தான். அவர் எனது தூரத்து உறவினர் ஆவார். என்னுடைய வீட்டில் ஒருவரை அடித்துள்ளேன். தவறு செய்தால் கண்டிப்பது வழக்கமானது. அது நமது அன்பின் வெளிப்பாடு. எனது தோள் மீது கையை போடுவதை மற்றவர்கள் பார்த்தால், என்ன நினைப்பார்கள் என்பதால், அவரை திட்டுவது சகஜமானது. நான், அவரை அடிப்பதை நீங்கள் (தொலைகாட்சியில்) அடிக்கடி போட்டு ஆனந்தம் அடைந்து கொள்கிறீர்கள். நீங்கள், அந்த நபரை கதாநாயகனாக மாற்றி விட்டீர்கள். சாதிவாரியாக நடந்த கணக்கெடுப்பை  நடத்த அரசு பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த தலைவா்கள் என்னை சந்தித்து பேசி இருந்தனர். அந்த அறிக்கையில் என்ன உள்ளது? என்பது பற்றி தெரியாது. இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுடன் ஆலோசித்து முடிவு எடுப்பேன்.

மக்களிடையே பீதியை...
காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்த போது, மண்டியா மாவட்டத்தின் பொறுப்பு மந்திரியாக நான் இருந்தேன். நீர்ப்பாசனத்துறை மந்திரியாகவும் நான் பதவி வகித்துள்ளேன். அந்த சந்தர்ப்பத்தில் யாரும் கே.ஆர்.எஸ். அணையில் விரிசல் ஏற்பட்டு இருப்பது குறித்து, எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அணையில் இருந்து 10 முதல் 15 கிலோ மீட்டர் தூரத்தில் கல்குவாரிகள், பிற சுரங்க தொழில்கள் நடப்பதால் எந்த பிரச்சினையும் ஏற்பட போவதில்லை.

100-க்கும் மேற்பட்ட என்ஜினீயர்கள், நீர்ப்பாசனம் மற்றும் கனிம, சுரங்கத்துறை மநதிரி உள்ளனர். அவர்கள் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். கே.ஆர்.எஸ். அணை விரிசல் விவகாரத்தில் மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்த காங்கிரஸ் விரும்பவில்லை. இநத விவகாரத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது தேவையற்றது. இதுபோன்ற சில்லறை பிரச்சினை குறித்து அதிகம் பேசவிரும்பவில்லை. கே.ஆர்.எஸ். அணை இந்த நாட்டின் சொத்து. அதுபற்றி தேவையில்லாத வதந்தி பரப்ப கூடாது.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story