ஜம்மு விமானப்படை தள தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பா?


ஜம்மு விமானப்படை தள தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பா?
x
தினத்தந்தி 12 July 2021 8:20 AM IST (Updated: 12 July 2021 8:20 AM IST)
t-max-icont-min-icon

ஜம்மு விமானப்படை தள தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகரான ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த மாத இறுதியில் டிரோன்கள் மூலம் 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை‌ சேர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இந்தியாவில் முதல் முறையாக டிரோன்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜம்மு விமானப்படை தளம் மீதான தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடர்பு இருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் சந்தேகம் தெரிவித்துள்ளன.

விமானப்படை தளம் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளில் ‘பிரஷர் பியூஸ்' என்கிற கருவி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இது பாகிஸ்தான் ராணுவத்தால் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

‘பிரஷர் பியூஸ்' என்பது உயரத்தில் இருந்து வீசப்படும் வெடிகுண்டுகள் காற்றில் வெடிக்காமல் தரையில் விழுந்த பின் வெடிப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவி என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் பாகிஸ்தான் ராணுவம் நிபுணத்துவம் பெற்று விளங்குவதால் விமானப்படை தளத்தில் தாக்குதலை நடத்த லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Next Story